கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு வர மறுத்த இரண்டு நபர்களில் 16வயது சிறுமி மீது மட்டும் வழக்குப்பதிவு செய்து, போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் பகுதிகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 81 நபர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 263 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மகாதானத்தெரு கிருஷ்ணன்கோயில் சந்தில் உள்ள 16 வயது சிறுமி ஒருவர் சென்னையிலிருந்து வந்துள்ளார். அவரை பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. சோதனை முடிவு வந்ததும் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சென்று அந்த சிறுமியை பலமுறை அழைத்தும் வர மறுத்ததுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் போலீசார் கட்டாயப்படுத்தி அந்த சிறுமியை அழைத்துச் சென்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டனர். தொடர்ந்து, அவர்மீது காவல் உதவி ஆய்வாளர் மகாதேவன் அளித்த புகாரின் பேரில் அந்த சிறுமி மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் மலேசியாவில் இருந்து வந்து மயிலாடுதுறை டவுன் எக்ஸ்டன்சன் பகுதியில் தங்கியுள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல மறுத்துள்ளார். அவருக்கு சுகாதாரத்துறை உயரதிகாரிகள் ரெக்கமன்ட் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.