சட்டீஸ்கரில் புதுக் கூட்டணி - மாயாவதி அதிரடி அறிவிப்பு

சட்டீஸ்கரில் புதுக் கூட்டணி - மாயாவதி அதிரடி அறிவிப்பு
சட்டீஸ்கரில் புதுக் கூட்டணி - மாயாவதி அதிரடி அறிவிப்பு
Published on

உத்தரப்பிரதேசத்தில், சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்தது. இந்தக் கட்சிகளின் கூட்டால் பாஜக படுதோல்வி அடைந்தது. முதலமைச்சர், துணை முதல்வர் எம்.பியாக இருந்த தொகுதிகளையே பாஜக இழந்தது. சமாஜ்வாடி கட்சி  வெற்றிவாகை சூடியது. இதனால், சமாஜ்வாடி கட்சி உடனான கூட்டணி தொடரும் எனக் கூறப்பட்டது. உத்திரப்பிரதேசத்தில் சாமாஜ்வாடி கட்சியின் கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. இதனால், அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்கும் என்று பேச்சுகள் அடிபட்டன. 

இதனிடையே, தொடக்கம் முதலே கௌரவமான இடங்களை கொடுத்தால்தான் கூட்டணியில் இடம்பெறுவேன் என்று மாயாவதி வலியுறுத்தி வந்தார். மக்களவை கூட்டணியில் இடம்பெற வேண்டுமெனில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டுமென கூறினார். குறிப்பாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் இடையே தொகுதி உடன்பாடு குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் மாயாவதி 50 இடங்கள் கேட்டுள்ளார். ஆனால், காங்கிரஸ் தரப்பில் 25-30 தொகுதிகளே தர முன் வந்தனர். இதனால், சமீபத்தில் பேசிய மாயாவதி கௌரவமான இடங்கள் கொடுக்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவேன் என்று தெரிவித்தார். 

இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்தில் அஜித் ஜோகி தலைமையிலான ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக மாயாவதி அறிவித்துள்ளார். மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 35 இடங்களிலும், ஜனதா காங்கிரஸ் 55 இடங்களிலும் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், தங்களுடைய கூட்டணி வெற்றி பெற்றால் அஜித் ஜோகி தான் முதலமைச்சர் என்றும் மாயாவதி கூறினார்.

காங்கிரஸ் கட்சிகள் பல ஆண்டுகள் இருந்த அஜித் ஜோகி சட்டீஸ்கர் மாநிலத்தின் முதல் முதலமைச்சர் ஆவர். இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடைசியாக 2000-03 ஆண்டுகளில் சட்டீஸ்கர் முதலமைச்சராக இருந்தார். பின்னர் ஒரு கொலை வழக்கு காரணமாக கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. பின்னர் அவர் கட்சியில் இருந்து பிரிந்து ஜனதா காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை 2016ல் தொடங்கினார். 

இந்நிலையில், காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்த அஜித் ஜோகி உடன் மாயாவதி கைகோர்த்துள்ளார். இந்த அறிவிப்பு மூலம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ராமன் சிங் முதலமைச்சராக இருந்து வருகிறார். “சட்டீஸ்கரில் பாஜக தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. மாயாவதி மற்றும் எனது கட்சி ஒன்று சேர்ந்து பாஜகவை தடுத்து நிறுத்துவோம்” என்று ஜோகி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com