மார்த்தாண்டம் அருகே கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்திருந்த தாய், தந்தை உட்பட பலரின் பிணங்களை ஒரு கும்பல் திருடி சென்றதாக மாற்றுத்திறனாளி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்குத் தெருவில் உள்ள பண்டாரவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயன் (42). மாற்றுத்திரனாளியான இவர் தனது குடும்பத்துடன் அவருக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக முக்கால் செண்டு இடத்தில் கல்லறை தோட்டம் உள்ளது. இவரது தாத்தா, பாட்டி மற்றும் தாய், தந்தையர் உயிரிழந்தபோது அவர்களை இந்த கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்து அதன்மேல் கல்லறையும் கட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 01.08.2020 அன்று இரவு 12 மணி அளவில் ஜேசிபி எந்திரத்தை வைத்து ஒரு கும்பல் தோட்டத்திpல் இருந்த கல்லறையை தோண்டி டெம்போவில் ஏற்றுவதை பார்த்த மாற்றுத்திறனாளி அந்த கும்பலிடம் எதற்காக இதை தோண்டி எடுக்கிறீர்கள் என கேட்டபோது அந்த கும்பல் இது எங்களுக்கு சொந்தமான இடம் எனக் கூறி மாற்றுத்திறனாளியான விஜயன் மற்றும் அவரது குடும்பத்தையும் தரக்குறைவாக பேசிவிட்டு அந்த நான்கு பிணங்களையும் அள்ளி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளி இரண்டாம் தேதி மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் ஆதிலிங்க போஸிடம் புகார் அளித்தபோது புகாரை வாங்கிய அவர், மாற்றுத்திறனாளியை தரக்குறைவாகவும் பேசியுள்ளார். புகாருக்கான ரசீதை மட்டும் வழங்கி விட்டு எந்த விதமான விசாரணையும் நடத்தவில்லை.
இதனிடையே தனக்கு நீதிகிடைக்க வேண்டும் என்று நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் சென்று புகார் அளித்தார் விஜயன்.
எனது தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோரின் பிணங்களை மீட்டு எங்களது கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்து தரவும் இந்த கொடும் செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளதாகவும் விஜயன் வேதனையுடன் கூறியுள்ளார்.