முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை அவரது ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சய் பாரு. இவர் ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். இந்தப் புத்தகத்தின் அடிப்படையில் பிரபல நடிகர் அனுபம் கெர் நடிப்பில் ‘தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரிலேயே திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2014 பொதுத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி அரசியலுக்கு மன்மோகன்சிங் பலிகடா ஆக்கப்பட்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லருக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சி இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும் காங்கிரசுக்கு எதிராக இந்த ட்ரெய்லரை முன் வைத்து பிரச்சாரத்தில் குதித்துள்ளது.
இந்தத் திரைப்படம் காங்கிரஸுக்கு எதிரான பரப்புரை என காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் தவறான தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக குற்றம்சாட்டிய மகராஷ்டிர மாநில இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் திரைப்படத்தை தங்களுக்கு திரையிட்டு காட்டவேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.
இதற்கிடையில் இந்தத் திரைப்படத்திற்கு மத்திய பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் அரசு தடை விதித்திருப்பதாக சில ஊடகங்களில் செய்தி பரவியது. இதை மறுத்துள்ள அம்மாநில அரசு அவ்வாறு தடை விதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.
‘தி ஆக்ஸிடெண்ட்ல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படத்தில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனுபம் கெர், இதில் தம் வாழ்நாளின் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். இதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் குற்றிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மன்மோகன் சிங்கை சந்தித்து இந்தப் பிரச்னை சம்பந்தமாக ஏஎன்ஐ செய்தியாளர் கேள்வி எழுப்பினார். ஆனால் காரை விட்டு இறங்கிய மன்மோகன் சிங் கேள்வியை உள்வாங்கிக் கொண்டு வழக்கமாக அவரது ஸ்டைலில் மிக அமைதியாக கடந்து சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.