விடுமுறையில் இருந்தவருக்கு வேலையும் போய், 73 லட்சத்துக்கான இழப்பீடும் பறி போயிருக்கிறது. சீனாவில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணிதான் நீதிபதியையே அதிர வைத்திருக்கிறது. அப்படி என்னதான் நடந்தது என பார்க்கலாம்.
கடந்த 2019ம் ஆண்டு தனக்கு இரண்டு வாரங்கள் விடுப்பு வேண்டும் எனக் கேட்டு ஸூ மோமு என்பவர் தன் அலுவலகத்தில் விடுப்புக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் பணிச்சுமை காரணமாக மோமுவுக்கு விடுப்பு கொடுக்க மேனேஜர் மறுத்துவிட்டார். ஆனால் விடுப்பு கிடைத்துவிடுமென குடும்பத்தோடு ஹைனானில் உள்ள தீவு ஒன்றுக்கு சுற்றுலா செல்வதற்காக எல்லா திட்டமும் தீட்டியிருந்திருக்கிறார் மோமு.
ஆனால் விடுமுறை கிட்டாததால் தனக்கு தலைச்சுற்றல் மற்றும் முதுகு வலி இருப்பதாக மருத்துவச் சான்று கொடுத்து 14 நாட்கள் கட்டாயம் ஓய்வெடுத்தே ஆகவேண்டும் மருத்துவர் கூறியதாகவும் சொல்லி sick leave -க்கு விண்ணப்பித்திருக்கிறார். இந்த சமயத்தில் மறுப்பு தெரிவிக்காத மேனேஜர் விடுமுறைக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.
அந்த விடுமுறை நாளை வைத்து குடும்பத்தோடு ஹைனான் தீவுக்கு செல்ல விமான நிலையத்துக்கு சென்ற போது அங்கு வைத்து அவரது சக ஊழியர் அவரை பார்த்துவிட்டார்! இதுகுறித்து அந்த ஊழியர் அலுவலகத்தில் தெரிவிக்கவே மேலாளரும் மோமுவை பணியில் இருந்து நீக்கியிருக்கிறார்.
இதனையடுத்து, நிறுவனத்தின் மீது பெய்ஜிங்கில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார் மோமு. அப்போது தான் உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சைக்காக செல்வதற்கே ஏர்போர்ட் வந்ததாக தன்னை நேர்மையானவர் எனக் காட்டிக் கொண்டிருக்கிறார் மோமு.
இதனை கருத்தில் கொண்டு, தடாலடியாக பணி நீக்கம் செய்ததற்காக மோமுவிற்கு 6,20,000 யுவான் அதாவது 73 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இதன் பின்னர் பெய்ஜிங்கின் மூன்றாவது இடைநிலை மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு மாறிய போது மோமுவின் தில்லாலங்கடி வேலை தெரிய வரவே, அவருக்கு கொடுக்கப்பட்ட 73 லட்ச ரூபாய் இழப்பீட்டை திருப்பி நிறுவனத்திடமே அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டதோடு, பணியை விட்டு நீக்கியது செல்லும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி!