மத்திய அரசுக்கு எதிராக மேற்கொண்டு வந்த தர்ணா போராட்டத்தை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கைவிடுவதாக அறிவித்துள்ளார்.
சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையாளர் ராஜிவ் குமாரை, சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க சென்ற போது அவர்கள் தடுக்கப்பட்டனர். இதனையடுத்து, மத்திய அரசு தன்னுடைய அரசியல் லாபத்திற்காக சிபிஐ அமைப்பை பயன்படுத்திக் கொள்வதாக கூறி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தத் தர்ணா போராட்டத்தில் ராஜிவ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ உச்சநீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்தது. இந்த வழக்கில், “ஆணையர் ராஜிவ் குமார் சிபிஐ விசாரணைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் வழக்கில் ஒத்துழைக்க வேண்டும். விசாரணை நடைபெறும் சமயத்தில் ராஜிவ் குமாரை கைது செய்யக் கூடாது. மேற்கொண்டு விசாரணை செய்யும் போது அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வழக்கு விசாரணைக்காக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜிவ் குமார் ஆஜராக வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை அவமதித்தார் என்று தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தலைமைச் செயலாளர், மேற்கு வங்க டிஜிபி, கொல்கத்தா காவல் ஆணையர் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கு வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், மூன்று நாட்களாக மேற்கொண்டு வந்த தர்ணா போராட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அப்போது பேசிய மம்தா, “இந்தத் தர்ணா போராட்டம் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்துக்கான வெற்றி. இன்று இதனை நாம் முடித்துக் கொள்வோம். நீதிமன்றம் நேர்மறையான தீர்ப்பை இன்று அளித்துள்ளது. அடுத்த வாரம் இந்த விவகாரத்தை நாம் டெல்லியில் தொடருவோம்” என்று கூறியிருந்தார்.
அதேபோல், “மத்திய அரசு அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் கட்டுப்படுத்த நினைக்கிறது. மாநில அரசின் அமைப்புகளையும் கூட. பிரதமர் டெல்லியில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, குஜராத்திற்கு செல்லுங்கள். ஒரு மனிதரின் ஆட்சி, ஒரு கட்சியின் அரசு டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது” என்று மம்தா குற்றம்சாட்டினார்.
மம்தா பானர்ஜி இந்த அறிவிப்பை வெளியிடும் போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் இருந்தார். ஏற்கனவே மம்தாவின் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்த இவர் தற்போது நேரில் சந்தித்துள்ளார்.