பெண்கள் அணியும் பிங்க் நிற ஹீல்ஸ் மற்றும் ஷூக்களை அணிந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மன்ற வளாகத்துக்குள் அணிவகுப்பும் நடத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்வு கனடாவின் நாடாளுமன்றத்தில் நடந்திருக்கிறது.
இது தொடர்பான வீடியோவும் ஃபோட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானதோடு எதற்காக ஆண்கள் பிங்க் நிற ஹீல்ஸ் அணிந்தார்கள் கேள்வியும் ஒருசேர எழுப்பப்பட்டிருக்கிறது.
ஏனெனில் கனடாவை சேர்ந்த Halton Women’s Place என்ற அமைப்பு ஹோப் ஆன் ஹீல்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்வை ஏற்படுத்தியிருந்தது.
இதில் பங்கெடுத்த கனடா நாடாளுமன்ற ஆண் உறுப்பினர்கள் பெண்கள் அணியும் பெண்களுக்கு பிடித்த நிறமாக கருதப்படும் பிங்க் நிறத்தில் ஹீல்ஸ் மற்றும் ஷூக்களை அணிந்து வந்து கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.
கடந்த வியாழனன்று இந்த சம்பவம் கனடா நாடாளுமன்றத்தில் நடந்திருக்கிறது. இது குறித்து கனடாவின் போக்குவரத்துத்துறை அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஒமர் அல்காப்ரா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அதில், “இந்த ஹோப் ஆன் ஹீல்ஸ் நிகழ்வு பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதனை ஆண்கள் பங்கெடுத்து நடத்த வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆகையால் நாங்கள் பெண்களுக்கான பிங்க் நிற ஹீல்ஸை அணிந்து எங்களது ஒத்துழைப்பை கொடுத்தோம்.
இருந்தாலும் நாங்கள் பெண்களின் ஹீல்ஸை அணிந்து வந்தது சில ஆண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையாக தூண்டியிருப்பது அவர்களின் அகங்காரம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை காட்டியுள்ளது.” என ஒமர் அல்காப்ரா குறிப்பிட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான பிங்க் நிற ஹீல்ஸை ஆண்கள் அணிந்து வந்து அணிவகுத்தது நெட்டிசன்களிடையே பரவலாக வைரலாகிய நிலையில், “பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் அனைத்து வகையிலும் இருப்பதாக உணர்த்தும் உங்களது கவனத்தையும் பெற்றிருக்கிறேன்.
என்னுடன் சேர்ந்த சக ஆண்களே இதன் மீதான விளைவுகள் குறித்து மிகுந்த விழிப்புணர்வோடு இருப்பதோடு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த விவகாரத்தில் நல்ல முறையில் செயல்பட்டு நம்முடன் பயணிக்கும் பெண்களுக்கான இடத்தை கொடுக்க தவறக் கூடாது” என்றும் கனடா அமைச்சர் ஒமர் தெரிவித்திருக்கிறார்.