மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பெயர் மலேசியாவில் ஆபத்தானவர்கள் பட்டியலில் இருப்பதால் அவர் மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அவர்களுடைய மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற வைகோ, அந்நாட்டின் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். வைகோ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், இலங்கையில் அவர் மீது பல வழக்குகள் இருக்கிறது. எனவே வைகோவின் பெயர் மலேசியாவில் ஆபத்தானவர்கள் பட்டியலில் உள்ளது என்றும் கூறி அந்நாட்டில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வைகோவின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இன்று இரவு 10.45 மணிக்கு சென்னை வந்து சேர்கின்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வைகோவை திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மலேசிய அதிகாரிகள் செய்துள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து பேசிய மதிமுகவின் அந்தரிதாஸ் கூறுகையில், “நடந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசும், இந்திய அரசும் இணைந்து வைகோவை வெளிநாடு செல்வதைத் தடுக்கும் நோக்கில் இப்படி செயல்பட்டுள்ளார்கள். பேராசிரியர் ராமசாமி மலேசிய விமானத்திற்கு சென்றுள்ளார். மலேசிய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள அதிகாரிகளிடம் பேச உள்ளதாக ராமசாமி தெரிவித்துள்ளார்” என்றார்.