மக்கள் நீதி மய்யத்தின் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளர் சி.கே. குமரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி, பரப்புரை, விருப்ப மனுக்கள் பரிசீலுப்பு என தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து வேட்பாளர்களையும் அறிவித்து விட்டது.
அதேசமயம் புதிதாக தேர்தலை சந்திக்க உள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி சேரவில்லை. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அதற்கான வேட்பாளர் நேர்காணலை நடத்தி வந்தது. வரும் 24 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது.
இதனிடையே தமிழகத்தில் நடக்கும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அந்தக் கட்சி போட்டியிட இருக்கிறது. அதற்கான வேட்பாளர்கள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கடலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தவர் சி.கே. குமரவேல் எனக் கூறப்படுகிறது. இவர் அக்கட்சியின் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது தேர்தல் நிலைபாடுகள், வேட்பாளர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில், மகேந்திரன், கோவை சரளா போன்றவர்கள் உடன் சி.கே. குமரவேலுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைமைக்கு சி.கே. குமரவேல் கடிதம் அனுப்பியுள்ளார்.