சி.கே.குமரவேலின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. வரும் 24 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் வேட்பாளர் அறிமுக விழா நடைபெற இருக்கிறது.
மேலும் தமிழகத்தில் நடக்கும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அந்தக் கட்சி போட்டியிட இருக்கிறது. அதற்கான வேட்பாளர்கள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே நாடாளுமன்றத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கடலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்தவர் சி.கே. குமரவேல் எனக் கூறப்படுகிறது. இவர் அக்கட்சியின் கடலூர் மற்றும் நாகை பொறுப்பாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைமைக்கு சி.கே. குமரவேல் கடிதம் அனுப்பியிந்தார். இதையடுத்து அவரது ராஜினாமாவை ஏற்றுகொள்வதாக மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் வேட்பாளர் தேர்வு முறைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் குமரவேல் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறும் செயல்களை எவ்விதத்திலும் அனுமதிப்பதில்லை. வேட்பாளர்கள் நேர்காணல் முடியும் முன்னே தன்னை வேட்பாளராக அறிவித்தது கட்சிக்கு முரண்பாடான செயல் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.