மதுரவாயல் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியாவின் பிரமாணப் பத்திரத்தை இணையத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கலின்போது, சொத்து, வழக்கு உள்ளிட்ட விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்வர். அதனை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து, அதில் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் எவர் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம். அந்தவகையில், இந்தமுறை மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் பத்மபிரியாவின் பிரமாணப் பத்திரத்தை 3 லட்சத்து 3 ஆயிரத்து 248 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர்களில் எடப்பாடி பழனிசாமியின் பிரமாணப் பத்திரத்தை 6 ஆயிரத்து 879 பேரும், மு.க. ஸ்டாலினின் பத்திரத்தை 4 ஆயிரத்து 351 பேரும் பதிவிறக்கம் செய்துள்ளனர். 15 ஆயிரத்து 563 பேர் கமல்ஹாசனின் பிரமாணப் பத்திரத்தையும், 10 ஆயிரத்து 261 பேர் சீமானின் பிராமணப் பத்திரத்தையும் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
கோவில்பட்டியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பிரமாணப் பத்திரத்தை 2 ஆயிரத்து 218 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதேபோல், போடிநாயக்கனூரில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வத்தின் பத்திரம் 2 ஆயிரத்து 821 பேராலும், ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்புவின் பிரமாணப் பத்திரம் 2 ஆயிரத்து 315 பேராலும், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் பத்திரம் 3 ஆயிரத்து 400 பேராலும் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.