அதிமுகவின் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்து மூன்று மாதங்களாகியும் கருத்து வேறுபாடுகள் தொடர்வதாக ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் வி.மைத்ரேயன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மைத்ரேயன், ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குவதாக தெரிவித்துள்ளார். மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள் என கேள்விக்குறியோடு அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ்-ஈபிஸ் அணிகள் இணைந்திருந்தாலும் அவர்களுக்கு எதிராக டிடிவி தினகரன் தற்போதும் களத்தில் இருக்கிறார். எனவே அதிமுகவின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் இந்த இரண்டு தரப்புக்கும் கடும் போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.