பிரதமராகப் பொறுப்பேற்றார் ராஜபக்ச - புதிய அரசுக்கு டக்ளஸ் தேவானந்தா ஆதரவு

பிரதமராகப் பொறுப்பேற்றார் ராஜபக்ச - புதிய அரசுக்கு டக்ளஸ் தேவானந்தா ஆதரவு
பிரதமராகப் பொறுப்பேற்றார் ராஜபக்ச - புதிய அரசுக்கு டக்ளஸ் தேவானந்தா ஆதரவு
Published on

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே இலங்கை பிரதமராக ராஜபக்ச முறைபடி பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள ராஜபட்ச அரசுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஆதரவு தெரிவித்துள்ளார். 

ரணில் விக்ரமசிங்கே உடனான மோதலின் உச்சக்கட்டமாக அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்திருந்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன. இ‌தனையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக அந்நாட்டு முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றார். இருப்பினும் ரணில் விக்கிரமசிங்கே பிரதமர் பதவியில் நீடிப்பதாக இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்ததால் அங்கு அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியது. இத்தகைய குழப்பமான சூழ்நிலையில், ராஜபக்ச பிரதமராக முறைபடி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்காக பிரதமர் அலுவலகத்துக்கு சென்ற அவர், தனது அலுவலகப் பணிகளை தொடங்கியுள்ளார்.

இலங்கையில் புதிய அரசுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை பெறவேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த ஆதரவு அளிப்படுவதாக அவர் கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்கே ஆட்சியில் தமிழ் மக்களுக்கு தேவையான எதனையும் செய்யமுடியாத நிலையே இருந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

இலங்கையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு, சிங்களர், தமிழர் என அனைத்துத் தரப்பினருக்குமான அரசாக இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார். 

புதிய தலைமுறையிடம் தினேஷ் குணவர்த்தன, “மகிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் போதிய அளவு எம்பிக்கள் பலம் உள்ளது. நாடாளுமன்றத்தில் அவருக்கு தெளிவான பெரும்பான்மை இருக்கிறது. நாடாளுமன்றம் கூடியதும் அதனை நிரூபிப்போம்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்தபடி நாடாளுமன்றம் வரும் 16 ஆம் தேதி கூடுகிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி, நாங்கள் அடுத்துவரும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய 3 மாதங்களுக்கான நிதியறிக்கையை நிறைவேற்றுவோம். இயல்புநிலை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வோம். நிதிநிலையை பேணுதல், சட்டம் ஒழுங்கை பராமரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். 

நாடாளுமன்றத்தேர்தல் விரைவில் நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இலங்கையில் சிங்களர், தமிழர், இஸ்லாமியர் என அனைத்துத் தரப்பினரின் நலமும் பாதுகாக்கப்படும். இந்த அரசு அனைத்துத்தரப்பினரின் நலனுக்கான அரசாக செயல்படும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com