நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்து தெர்மாக்கோல் கை, மற்றும் டீ சர்ட்டுடன் பொதுமக்களிடம் இளைஞர் ஒருவர் நூதன முறையில் விழிப்புணர்வை எற்படுத்தி வருகிறார்.
மதுரை செனாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் அசோக்குமார். இவர் தொடர்ந்து பல்வேறு சமூக சேவை பணிகளிலும், கொரோனா காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தன்னார்வலராகவும் செயலாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
இதைத் தொடர்ந்து மாவட்டங்கள் தோறும் நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் கையெழுத்து இயக்கம், மாதிரி வாக்குப்பதிவு பயிற்சி என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மதுரையை சேர்ந்த தன்னார்வலர் அசோக்குமார் ஒரு விரல் மை நமது தேசத்தின் வலிமை, வாக்களிப்பது நமது கடமையும் உரிமையும் என்ற வாசகங்கள் அடங்கிய டீ சர்ட் ஒன்றை அணிந்து கொண்டு தெர்மாக்கோலால் செய்யப்பட்ட மை வைக்கப்பட்ட விரலை கையில் ஏந்தியபடி நம் வாக்கு நம் உரிமை, நூறு சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகங்களோடு மக்கள் கூடும் இடங்களில் நின்று நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை பொதுமக்கள் கூடும் பகுதிகளில் தொடர்ந்து நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக அசோக்குமார் தெரிவித்தார்.