கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யுமாறு, காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு பிரிவினரிடையே மோதல் உண்டாக்கும் நோக்கில் ஹெச்.ராஜா அறிக்கை வெளியிட்டும், அதன் மீதான புகாரில் நடவடிக்கை இல்லை என இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “ராமநாதபுரத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்து முன்னணி பிரமுகர் வெட்டப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இஸ்லாமியர்கள்தாம் காரணம் என்று பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா அறிக்கையும் பேட்டியும் கொடுத்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சொத்துத் தகராறில் இந்து முன்னணியை சேர்ந்த 4 பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையே, ஹெச்.ராஜா இரு சமூகத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக அவதூறாகப் பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அந்தப் புகாரின் பேரில் ஹெச்.ராஜாமீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். ரமேஷ், ஹெச்.ராஜா மீதான புகாரில் முகாந்திரம் இருப்பின் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.