தப்பியது எடப்பாடி ஆட்சி ! என்ன ஆகும் தினகரன் எதிர்காலம் ?

தப்பியது எடப்பாடி ஆட்சி ! என்ன ஆகும் தினகரன் எதிர்காலம் ?
தப்பியது எடப்பாடி ஆட்சி ! என்ன ஆகும் தினகரன் எதிர்காலம் ?
Published on

தமிழக அரசியல் களத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு முக்கிய வழக்குகளில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா பட வழக்கு அதிமுகவினரின் கௌரவ பிரச்னையாகவே பார்க்கப்பட்டது. ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு ஆட்சி அதிகாரத்திற்கே சிக்கலை உண்டாக்க கூடியது. இந்த இரண்டு வழக்குகளிலும் அதிமுகவினருக்கு சாதகமாகவே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அதிமுகவினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். கிட்டதட்ட தங்கள் ஆட்சியின் மீது தொங்கிக் கொண்டிருந்த கத்தி தற்போது நீதிமன்றத்தால் அகற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் ஆட்சி மேலும் வலுவடைந்துள்ளது.

ஆனால், நீதிமன்ற தீர்ப்பு குறித்து பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன. சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி குத்தூஸ் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. சபாநாயகரின் அதிகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டி நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் தமிழ்மணி கூறுகையில், “சபாநாயகர் அதிகாரம் தொடர்பான வழக்கு இன்னும் 30 ஆண்டுகள் கூட நடக்கலாம், அதுவரை தலையிட முடியாது என்று கூறுவது எப்படி சரியாக இருக்கும். அப்படியென்றால், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை தவறான முடிவுகளை எடுக்கலாமா?. சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட இயலாது என்று கூறுவதற்கு பதிலாக நீதிபதிகள் தலையிட முடியாது என்று கூறியுள்ளனர். உண்மையில் அவர்களுடைய கைகள் கட்டப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பினார்.

ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், அடுத்ததாக நிலுவையில் உள்ள தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு மீது எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது. சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படியே, 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால், இந்த இரண்டு வழக்குகளிலும் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதாவது, 11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகர் உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி தான் வழக்கு. சபாநாயகர் முடிவு எதுவும் எடுக்காததால் அவரது அதிகாரத்தில் தலையிட முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் இறுதி முடிவு எடுத்து விட்டார். அந்த முடிவு சரியா? அல்லது தவறா? என நீதிமன்றம் முடிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

அதேபோல், 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கோடும் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. தகுதி நீக்கம் செய்யும் முடிவில் தங்களின் கருத்தினை கேட்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் முறையிட்டனர். அவர்களுக்கு சாதகமாகவே டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஒருவேளை அந்த வகையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கையும் ரத்து செய்யப்படலாம். அப்படி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சாதமாக அளிக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் பதவியை பெறுவார்கள். அதற்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வர வாய்ப்புள்ளதால் சிக்கல் நீடிக்க வாய்ப்புள்ளது. எடப்பாடி ஆட்சிக்கும் ஆபத்து ஏற்படும்.

ஒருவேளை வேறு ஏதேனும் ஒரு காரணத்தை காட்டி தகுதி நீக்க உத்தரவு செல்லும் என்றும் நீதிமன்றம் கூறலாம். அப்படி தீர்ப்பு அளிக்கப்பட்டால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் இடைத்தேர்தல் வரும். அப்படி இடைத்தேர்தல் வந்தால், தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com