மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநருக்கு எதிர்க்கட்சி தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கமல்நாத் முதலமைச்சராக உள்ளார். டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவியது. இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சம அளவிலே தொகுதிகளை கைப்பற்றின. காங்கிரஸ் 114 இடங்களையும், பாஜக 109 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் சுயேட்சைகள் (4), பகுஜன் சமாஜ் (2), சமாஜ்வாடி (1) ஆகியவற்றுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. மத்திய பிரதேச சட்டசபையில் பாஜக பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் அரசு மைனாரிட்டியாக உள்ளதாகவும், அது தன்னுடைய பலத்தை அவையில் நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மத்தியப் பிரதேச எதிர்க்கட்சி தலைவர் கோபால் பார்கவ் ஆளுநர் ஆனந்தி பென் படேலுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அவர் தன்னுடைய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்.எல்.ஏக்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகவும், வேறு கட்சிகளுக்கு தாவ அவர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பாஜக அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மொத்தமுள்ள 29 இடங்களில் பாஜக சுமார் 25 இடங்களிலும், காங்கிரஸ் சுமார் 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிப்புகள் கூறுகின்றனர். கருத்துக் கணிப்புகள் தங்களுக்கு சாதகமாக உள்ள நிலையில், மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு காங்கிரஸ் அரசுக்கு பாஜக அழுத்தம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.