மத்தியபிரதேச மாநிலத்திலும் மிசோரம் மாநிலத்திலும் அமைதியான முறையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் மிசோரமில் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவே வாக்குப் பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. நரேலா, கோவிந்த்புரா போன்ற இடங்களில் தமிழர்கள் ஆர்வமாக வாக்களித்தனர். நக்சலைட்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளிலும் 65 சதவீதத்திற்கு மேல் வாக்குப் பதிவு நடைபெற்றது.
சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது. பின்னர் வேறு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பிரச்னைகள் சரி செய்யப்பட்டன. பல வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தாமதமான வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவதற்கு பரிசீலனை செய்யப்படும் என தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் 74.61 சதவீதம் வாக்குகளும் மிசோரமில் 73 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. மத்திய பிரதேசத்தில் கடந்த முறை 71 சதவீதம் பதிவாகியிருந்த நிலையில் அதை விட அதிமான வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என கூறப்படுகிறது.
தற்போதைய முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் புத்னி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத், ஜோதிராதித்ய சிந்தியா தங்களுடயை தொகுதியில் வாக்கை பதிவு செய்தனர். 200 தொகுதிக்கு மேல் வென்று மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேபோல், காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் பரப்புரை குழு தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மிசோரம், மத்தியபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார் என்பது குறித்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டிசம்பர் 11ஆம் தேதி தெரியவரும்.