பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்தாவதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இளம்பெண்களின் வாழ்க்கையை இரக்கமின்றி சூறையாடிய இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கும்போது சாதாரணமாகக் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட நடைமுறைகளைக் கூட கடைப்பிடிக்காமல் இருப்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சிக்கியுள்ள குற்றவாளிகளை எப்படியாவது தப்ப விட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு காவல்துறை செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின், குண்டர் சட்டம் ரத்தானதற்கு அரசு துணை போயிருப்பது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆட்சியரின் அலட்சியமும், ஆர்வமின்மையும் வழக்கு விசாரணையின் போக்கையே மாற்றும் ஆபத்தாக மாறியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுபோன்ற சூழலை அரசு ஏன் திட்டமிட்டு உருவாக்குகிறது? யாரைக் காப்பாற்ற இந்த முற்சிகள் நடக்கின்றன? என்ற கேள்விகள் எழுவதாக அவர் தெரிவித்துள்ளார். இளம்பெண்களின் எதிர்காலத்தை சீரழித்த கயவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.