ஒரு மக்களவை தொகுதியை எப்படி வரையறை செய்கிறார்கள் !

ஒரு மக்களவை தொகுதியை எப்படி வரையறை செய்கிறார்கள் !
ஒரு மக்களவை தொகுதியை எப்படி வரையறை செய்கிறார்கள் !
Published on

2019 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிவருகின்றனர். அத்துடன் கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தலில் தொகுதிகள் எவ்வாறு வரையறை செய்யப்படுகின்றன என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 81-ன்படி  மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒதுக்கப்படும் இடங்கள் அம்மாநிலத்தின் மக்கள்தொகையை வைத்து முடிவு செய்யப்படுகின்றன. அத்துடன் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் அம் மாநிலத்தின் மக்கள்தொகை விகிதாசாரத்தின் அளவு சமமாக இருக்கவேண்டும். உதாரணமாக தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதேபோல உத்தரபிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையில் அம்மாநிலத்திற்கு 80 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தத் தொகுதிகள் வரையறை ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குபின் மாற்றியமைக்க வேண்டும். இதற்காக 1952,1962,1972 ஆகிய ஆண்டுகளில் தொகுதிகள் வரையறை ஆணையம் அமைக்கப்பட்டது. 

தொகுதிகள் வரையறை ஆணையம்:

தொகுதிகள் வரையறை ஆணையம் நாடாளுமன்றச் சட்டத்தினால் அமைக்கப்படுகிறது. இந்த ஆணையத்தின் முடிவுகளை யாராலும் திருத்தம் செய்ய முடியாது. அதாவது இதன் முடிவில் நாடாளுமன்றமோ அல்லது நீதிமன்றமோ தலையிட முடியாது. இந்த ஆணையத்தில் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் 2 உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

அதன்பின்னர், 42வது அரசியலமைப்பு திருத்தம் சட்டம், 1972 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி வரையறை 2000ஆம் ஆண்டு வரை தொடரும் என்றும் திருத்தம் கொண்டுவந்தது. ஏனென்றால் மக்கள்தொகையை கட்டுபடுத்தும் நடவடிக்கை அப்போது அமலில் இருந்தது. இதனால் மக்கள்தொகையை குறைத்தால் மக்களவையில் இடங்கள் குறைந்துவிடும் என எண்ணி மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுபடுத்தமாட்டார்கள். அதனால் இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

84வது அரசியலைமப்பு சட்டத் திருத்தம் 2001ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதில் ஏற்கனவே இருக்கும் தொகுதி வரையரை வரும் 2026 வரை தொடரவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் இச்சட்டம் மொத்த இடங்கள் மாறாமல் தொகுதிகள் மட்டும் 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் மூலம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றது. அதற்குபிறகு 87வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1991ஆம் ஆண்டிற்கு பதில் 2001ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு மட்டும் செய்யவேண்டும் என்றது. இதனால் 2002 ஆம் ஆண்டு தொகுதிகள் வரையறை ஆணையம் தொகுதி மறுசீர்மைப்பிற்காக அமைக்கப்பட்டது. அதில் மக்களவை இடங்கள் மாறாமல் தொகுதிகள் மட்டும் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.

பட்டியலின மக்களுக்கு தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 330 மற்றும் 332 வழிவகுக்கிறது. அதன்படி பட்டியலின மக்களின் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு தொகுதிகள் வரையறுக்கப்பட்டுகின்றன. அதன்படி 2002 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதிகள் வரையறையின்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 84 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கும், 47 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 7 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com