உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக தேர்தல் இந்தியா நாடாளுமன்றத் தேர்தல். ஆகவே அதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலநாடுகளால் கவனிக்கப்படுகிறது. இந்தத் தேர்தல் திருவிழாவில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் அரங்கேறுவது உண்டு. இம்முறை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் 185 வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். இதனால் அத்தொகுதியில் அதிகபட்சமாக 26,820 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் 2600 ‘விவிபேட்’ இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்நிலையில் இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிக வேட்பாளர்கள் களம் கண்ட தொகுதிகள் என்னென்ன?
நாட்டிலேயே அதிக வேட்பாளர்களை களமிறங்கிய தொகுதியாக ஆந்திர மாநிலத்தின் நல்கொண்டா தொகுதி பெருமை பெற்றுள்ளது. இதனையடுத்து இரண்டாவது இடத்தில் கர்நாடகா மாநிலத்தின் பெல்காம் தொகுதி இடம் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் கிழக்கு டெல்லியும் ஹரியானா மாநிலம் பிவானி தொகுதியும் உள்ளன. இறுதி இடத்தை கிழக்கு டெல்லி பிடித்திருந்தது. இந்தத் தொகுதிகளில் அனைத்திலும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால் பெரிய நிர்வாக சிக்கல்கள் ஏதும் கடந்த காலங்களில் உருவாகவில்லை.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதை குறைக்க வேட்புமனுவுடன் செலுத்தப்படும் டெபாசிட் தொகையை படிப்படியாக உயர்த்தியது. அதன்படி 1996ஆம் ஆண்டு 500 ரூபாயாக இருந்த வைப்பு தொகை தற்போது 25ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும் இம்முறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இதனால் இந்தத் தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 12 இயந்திரங்கள் பயன்படுத்தவேண்டும். ஏனென்றால் ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் ஒதுக்க முடியும்.
இத்தொகுதியில் 1,788 வாக்குச் சாவடிகள் உள்ளதால் தேர்தல் நடத்த 22 ஆயிரம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். அதனால் தேர்தல் ஆணையம் இத்தகைய அளவிலான வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கி தேர்தல் அங்கும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமே நடைபெறும் என உறுதியளித்துள்ளது.
அத்துடன் அங்கு வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெறுமா என்ற குழப்பத்திற்கும் முற்றுபுள்ளி வைத்துள்ளது. இத்தொகுதியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.