தங்களது கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் 41% பெண்களுக்கு வாய்ப்பளித்த மம்தா
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் 41% பெண்கள் இடம்பிடித்துள்ள விவரம் தெரியவந்துள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் முன்னேற்பாடுகளை செய்துவருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்திவருகின்றனர். அத்துடன் சில அரசியல் கட்சிகள் தங்களின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். அப்பட்டியலில் பெண்களுக்கு 41% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மம்தா பானர்ஜி, “இந்த முறை 41% பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளோம். இதுவே ஒரு பெரிய சாதனையாகும். ஏனென்றால் கடந்த தேர்தலில் நாங்கள் 35% பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தோம். இந்தத் தேர்தலில் அதை அதிகரித்துள்ளோம். அத்துடன் மேற்கு வங்கத்திலுள்ள 42 தொகுதிகளை வெல்லவேண்டும் என்பதே எங்களது இலக்கு.
மேலும் இந்தத் தேர்தலில் பினய் தமங் தலைமையிலான கோர்கா ஜன்முக்தி மோர்சா குழுவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஜார்கண்ட், அசாம், ஒடிசா, பீகார் மற்றும் அந்தமானில் போட்டியிடவுள்ளது. மேலும் நான் மோடி களமிறங்கவுள்ள வாரணாசி தொகுதியில் பிரச்சாரம் செய்ய ஆர்வமுடன் உள்ளேன். மாயாவதி மற்றும் அகிலேஷ் அழைத்தால் நிச்சயம் அவர்களுக்காக அங்குச் சென்று பிரச்சாரம் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.