மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளார்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் சிலரின் சொத்து விவரங்களை தற்போது பார்க்கலாம்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வசந்தகுமாருக்கு மொத்தம் சுமார் 230 கோடி ரூபாய் அளவுக்கு அசையும் சொத்தும், அசையா சொத்துகள் சுமார் 182 கோடி ரூபாய் மதிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் தன்னுடயை வருமானம் சுமார் 29 கோடி ரூபாய் எனவும், வங்கிகளில் தனக்கு சுமார் 154 கோடி ரூபாய் கடன் இருப்பதாக வசந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.
நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தன் பெயரில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும், 31 லட்ச ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2017-18ஆம் ஆண்டில் தனது வருமானம் 9 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் என்று ஆ.ராசா வேட்பு மனுவில் தெரிவித்துள்ளர்.
தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், சுமார் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும், 50 லட்ச ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும், வங்கியில் 1 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2018-19ஆம் நிதி ஆண்டில் தனது வருமானம் சுமார் 93 ஆயிரம் ரூபாய் என வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் திருநாவுக்கரசர் 4 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும், சுமார் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வங்கிக்கடன் 40 ஆயிரம் ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ள திருநாவுக்கரசர், 2018-19ஆம் நிதி ஆண்டில் தனது வருமானம் 5 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி, தனக்கு 21 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துகளும், 8 கோடியே 92 லட்ச ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2017-18ஆம் நிதி ஆண்டில் சுமார் 1 கோடியே 40 லட்ச ரூபாய் தனக்கு வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள கனிமொழி, சுமார் 1 கோடியே 92 லட்ச ரூபாய் வங்கிக்கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.