வாக்குவாதம், நிராகரிப்பு, ஆர்ப்பாட்டம்..! - வேட்புமனு பரிசீலனை கலாட்டாக்கள் - ஓர் தொகுப்பு

வாக்குவாதம், நிராகரிப்பு, ஆர்ப்பாட்டம்..! - வேட்புமனு பரிசீலனை கலாட்டாக்கள் - ஓர் தொகுப்பு
வாக்குவாதம், நிராகரிப்பு, ஆர்ப்பாட்டம்..! - வேட்புமனு பரிசீலனை கலாட்டாக்கள் - ஓர் தொகுப்பு
Published on

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையின்போது தமிழகத்தின் பல இடங்களில் வாக்குவாதம், பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு மொத்தம் 74 ஆயிரத்து 416 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் அதிமுக, தமுமுக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 5 பேர் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் நாகராஜன் அறிவித்தார். இதையடுத்து அவரை மாற்றக் கோரி வேட்பாளர்கள் நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 21வது வார்டு அதிமுக வேட்பாளர் புஷ்பா, சுயேச்சை வேட்பாளர்கள் சுமையா பர்வீன் மற்றும் அஸ்மாநாச்சியா மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மற்றொரு அதிமுக வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் தவறாக இருந்ததால் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் கலைந்து சென்றனர்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் வேட்புமனு பரிசீலனையின் போது அதிமுக, திமுகவினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. முறையாக கையெழுத்திடாததால், 15-வது வார்டில் போட்டியிடும் தெய்வேந்திரன் என்பவர் மனுவை நிராகரிக்க வேண்டும் என திமுகவினர் கூறினர். இதுதொடர்பாக இருவரும் மாறிமாறி குற்றச்சாட்டுகள் கூறிய நிலையில், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் அதிமுக வேட்பாளர் மனுவில் கையெழுத்துகள் சரியாக இருப்பதாக ஆணையர் கண்ணன் கூறி, மனுவை ஏற்றுக் கொண்டார்.

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் 11-வது வார்டுக்கு அதிமுக சார்பில் சுரேஷ் என்பவர் வேட்புமனுதாக்கல் செய்தார். சுரேஷ் நகராட்சிக்கு சொந்தமான கடையை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருவதால் அவரது மனு நிராரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அதிமுகவினரின் போராட்டத்தைத் தொடர்ந்து வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஈரோடு: புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் 18 வார்டுகளில் போட்டியிடுவதற்காக 84 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் 12-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக மனுதாக்கல் செய்த ஆறுமுகம் என்பவர் வைப்புத்தொகை செலுத்ததால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என தனக்கு தெரியாது என அப்பாவியாக ஆறுமுகம் கூறியுள்ளார்.

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் அதிமுக வேட்பாளர்களுக்கு நோட்டரி பப்ளிக் சான்றிதழ் வழங்கியது செல்லாது என திமுக புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நோட்டரி பப்ளிக் சான்றிதழ் வழங்குவதற்கு 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் இருப்பதாக சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் இ.எஸ்.முரளியும், முன்னாள் எம்.பி. கோ.ஹரியும் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்த நிலையில், பிரச்னை முடிவுக்கு வந்தது.

சிவகங்கை: திருப்புவனம் பேரூராட்சியில் 8-வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் ஜெயமணி என்பவருக்கு, தாம் முன்மொழியவில்லை எனக் கூறி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீண்டும் கையெழுத்திடச் சொன்ன அதிகாரி, அவர்தான் கையெழுத்திட்டுள்ளார் எனக் கூறி பாஜக வேட்பாளர் மனுவை ஏற்றுக் கொண்டார்.

நாமக்கல்: நாமக்கல் நகராட்சியில் 29-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜேஸ்வரி என்பவர் இரண்டாயிரம் ரூபாய்க்குப் பதில் ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகை செலுத்தியதாகக் கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இருதரப்பையும் அங்கிருந்து வெளியேற்றினர். இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவீந்திரனிடம் கேட்ட போது திமுக வேட்பாளர் 2 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 838 பதவி இடங்களுக்கு நடத்தப்படும் தேர்தலில், திமுக, அதிமுக கூட்டணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி வெள்ளிக் கிழமையுடன் முடிவடைந்தது. இதில் மொத்தமாக 74 ஆயிரத்து 416 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

அதில், ஆயிரத்து 374 மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 14 ஆயிரத்து 701 பேரும், 3 ஆயிரத்து 843 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 23 ஆயிரத்து 354 பேரும், 7 ஆயிரத்து 621 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 36 ஆயிரத்து 361 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுவை திரும்பப்பெற வரும் 7 ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணி வரை மனுக்களை திரும்பப் பெறலாம். மாலை 3 மணிக்குப் பிறகு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com