தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில், முடிவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்ற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார். அப்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி, போதிய அலுவலர்கள் இருப்பதை உறுதி செய்து அமைதியான முறையில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மையத்துக்குள் அடையாள அட்டை இல்லாத எவரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் மையத்துக்கு வெளியே 200 மீட்டர் இடைவெளிக்குள் கூட்டம் கூடுவதை தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் முடிவுகளை உடனடியாக மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 2 ஆயிரத்து 981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 29 ஆயிரத்து 998 பதவிகளுக்கு 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிட்டனர்.