2023ம் ஆண்டு தொடங்கிய 20 நாட்களுக்குள்ளேயே உலகின் 153 நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட 50,000க்கும் மேலான ஊழியர்கள் பணி நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதோடு அபாய மணியையும் ஒளிக்கச் செய்திருக்கிறது.
ஏதோ சிறு, குறு அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மட்டும் இந்த பணிநீக்கம் நடக்காமல் மெட்டா, மைக்ரோசாஃப்ட், கூகுள், ட்விட்டர், அமேசான் என பல முன்னணி டெக் நிறுவனங்களே இந்த அதிரடி லே ஆஃபை மேற்கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், ஃப்ரஷர் அல்லது கடந்த சில ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்தவர்களை விட ஐ.டி மற்றும் டெக் நிறுவனங்களில் கிட்டத்தட்ட 10 முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றிய மூத்த அதிகாரிகளே பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
குறிப்பாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 21 ஆண்டுகளாக பணியாற்றியவரை திடீரென அந்த நிறுவனம் வேலையை விட்டு தூக்கியிருக்கிறது. அதேபோல கூகுள் போன்ற உச்சத்தில் இருக்கும் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக வேலையில் இருந்தவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் வெறுமனே மின்னஞ்சல் வழியாக பணி நீக்கம் செய்வதாக அறிவித்திருப்பது ஊழியர்களிடையே கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் பலரும் லிங்க்ட் இன் போன்ற தளங்களில் தங்களது உள்ளக்குமுறல்களை கொட்டித் தீர்த்து வருகிறார்கள். அந்த வகையில், அபிஷேக் கண்ட்டி என்பவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனது லிங்க்ட் இன் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது பேசுபொருளாகியிருக்கிறது.
அதில், “வேறு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்காக ஊழியர்களின் விஸ்வாசத்தை மனிதவள மேம்பாட்டு துறையில் இருப்பவர்கள் ஏளனமாக நினைக்கக் கூடாது. நிறுவனங்கள் ஊழியர்களுக்கு விஸ்வாசமாக இருக்காத போது ஊழியர்கள் மட்டும் எதற்காக நிறுவனங்களுக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பி அபிஷேக் பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவு வைரலாகவே பலரும் அபிஷேக்கின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்கள். ஏனெனில் HR துறையில் இருப்பவர்களும் மற்ற ஊழியர்களை போன்றவர்களே. அவர்களுக்கு மேலிருக்கும் நிர்வாகத்தின் முடிவால்தான் இந்த ஆட்குறைப்புகள் நடைபெறுகிறது என்றும் தங்கள் தரப்பு கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கு, “நான் HR-களை குறை கூறவில்லை. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் விஸ்வாசம் என்பது முற்றிலும் குறைந்து வருகிறது. ஆகவே ஊழியர்களை பணிக்கும் எடுக்கும் போது அவர்கள் வேறு வேலைக்கு சென்றிடுவார்கள் என்பதற்காக மனிதவளத் துறையில் இருப்பவர்கள் புறக்கணிப்பது நல்லதன்று. அவ்வளவேதான்.” என அபிஷேக் விளக்கியிருக்கிறார்.
ALSO READ: