சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக்கூறிய கமல்ஹாசனுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராய், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பள்ளப்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ எனத் தெரிவித்தார்.
கமல்ஹாசனின் இந்தக் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்தி நடிகர் விவேக் ஓபராய், ''அன்புள்ள கமல், நீங்கள் ஒரு சிறந்த கலைஞன். கலைக்கு எப்படி மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது.
கோட்சே தீவிரவாதி என நீங்கள் கூறி இருக்கலாம். ஏன் இந்து என குறிப்பிட்டு கூறினீர்கள். நீங்கள் வாக்கு கேட்கும் இடத்தில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் என்பதாலா? நாம் அனைவரும் ஒன்றே. தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள்'' என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் கருத்து குறித்து பேசியுள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத உணர்வுகளை தூண்டி கலவரத்தை உண்டாக்க நினைக்கிறார். கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரசாரத்தில் பேசுவது விஷமத்தனம். ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.