தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை. இருமொழிக்கல்வி மட்டுமே தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றப்படும். புதியக் கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனையளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழ் மொழிக்கோ, தமிழக மக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், “மூன்றாவது மொழி தேவையில்லை. தேவையின் அடிப்படையிலேயே மொழியை கற்றுக்கொள்ள முடியும். மூன்றாவது மொழியை திணிக்கக்கூடாது. தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே போதுமானது. தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மூன்றாவது மொழி தேவையில்லாத சுமைதான். சுமையை மாணவர்கள் மீது ஏற்றக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், “மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வியே மாநில பட்டியலுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மும்மொழிக் கொள்கைக்கு மட்டும் முதலமைச்சர் அறிக்கை கொடுத்துள்ளார். மற்றவை பற்றியெல்லாம் என்ன சொல்கிறார்கள் என்பதை பொருத்துதான் அவர்களின் நிலைப்பாடு தெரியும்.” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ செம்மலை கூறுகையில், “நாங்கள் எப்போதும் இருமொழிக்கொள்கையில் உறுதியாக உள்ளோம். புதிய கல்விக்கொள்கை தமிழக மக்களுக்கு எதிர்ப்பாக இருக்காது என்பது முதல்வரின் எண்ணம். உயர்கல்வியும் மத்திய பட்டியலுக்கு செல்லக்கூடாது. மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்தின் கொள்கைக்கு செவி சாய்க்க வேண்டும். பண்முகத்தன்மை கொண்ட நாடு இது. மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அனைவருக்கும் ஒரே திட்டம் என சொல்வது தவறு” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த நாராயணன் கூறுகையில், “யாரும் மும்மொழிக்கொள்கையை கட்டாயப்படுத்தவில்லை. கல்விக்கொள்கை என்பது மாநிலங்களை பொறுத்தது. யாரும் எந்த மொழியையும் கட்டாயப்படுத்தவில்லை என அமைச்சர் தெளிவாக சொல்லியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “முதலமைச்சர் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் உயர்கல்வி மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாறியுள்ளது. இதுகுறித்து விரிவான கடிதம் எதிர்கட்சிகளின் சார்பில் முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.