“கருத்து கணிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை” - லயோலா கல்லூரி

“கருத்து கணிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை” - லயோலா கல்லூரி
“கருத்து கணிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை” - லயோலா கல்லூரி
Published on

பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் தேர்தல் கருத்துகணிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என லயோலா கல்லூரி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக, பண்பாடு மக்கள் தொடர்பகம் சார்பில் கருத்துக் கணிப்பு நடந்தது. அதில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில், திமுக தலைமையிலான கூட்டணி 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி 3 முதல் 5 இடங்களிலும் அமமுக 2 இடங்கள் வரையிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 

இதேபோல 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 9 முதல் 11 தொகுதிகளிலும் அதிமுக 2 அல்லது 3 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அமமுக 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது”  எனக் கூறப்பட்டுள்ளது. 

கணிக்க முடியாத தொகுதிகளாக இரண்டு தொகுதிகள் இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக பண்பாடு மக்கள் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சூழலில் தமிழகத்தில் யார் முதல்வராக வேண்டும் என்ற கேள்விக்கு மு.க. ஸ்டாலின் - 31%,  இபிஎஸ் ஓபிஎஸ் - 22%, டிடிவி - 20% என முதல் மூன்று இடங்களில் உள்ளனர். மத்திய அரசின் செயல்பாட்டை பொறுத்தவரை 87% அதிருப்தி என்றும், 10% பேர் திருப்தி என்றும் 3% பரவாயில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் தேர்தல் கருத்துகணிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என லயோலா கல்லூரி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லயோலா கல்லூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக பண்பாடு மக்கள் தொடர்பகம் (லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்) மாநிலம் முழுவதும் கள ஆய்வு நடத்தி இறுதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. 

2019 நாடாளுமன்றத் தேர்தல் 40 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற தலைப்பில், பண்பாடு மக்கள் தொடர்பகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைக்கும் எமது நிர்வாகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கடந்த சில தேர்தல்கள் தொடர்பாக எமது நிர்வாகம் சார்பில் எவ்வித கருத்துகணிப்பும் ஆய்வறிக்கைகளும் வெளியிடவில்லை எனச் சுட்டிக்காட்டுவது எங்களது கடமை. இது போன்ற கருத்து கணிப்புகளை லயோலா கல்லூரி கருத்துகணிப்பு என்று ஊடங்கங்கள் செய்திகள் வெளியிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com