காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவைத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த கே.வி.தங்கபாலு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை களமிறங்கி வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 4-வது முறையாக அமேதி தொகுதியிலும்,கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் தனது சகோதரி பிரியங்காவுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். கேரள மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய பின் வயநாடு தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் தேர்தல் பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த கே.வி.தங்கபாலு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவில் வடக்குப் பகுதியில் இருக்கும் வயநாடு மக்களவைத் தொகுதி தென்கிழக்கில் தமிழகத்தையும் வட கிழக்கில் கர்நாடகாவையும் எல்லையாக கொண்டுள்ளது. மேலும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தொடர்ந்து 2 தேர்தல்களில் வென்ற நிலையில் ராகுல் காந்தி தற்போது வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். கேரளாவிலிருந்து முதல்முறையாக களமிறங்கும் ஒரு பிரதமர் வேட்பாளருக்கு ஆதரவளியுங்கள் என காங்கிரஸ் பரப்புரை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.