தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தனித்தொகுதி அதிமுக பலம் பெற்ற தொகுதியாக பார்க்கப்படுகிறது. ஆயினும் கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றிபெற்றார். இங்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆறாவது முறையாக போட்டியிடுகிறார். இங்கு களம் சொல்வதென்ன? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஓட்டப்பிடாரம். ஓட்டப்பிடாரம் தாலுகா, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தாலுகாக்களில் உள்ள சில பகுதிகளை இந்த தொகுதி உள்ளடக்கியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியின் சில பகுதிகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் வருகின்றன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் மோகன், திமுக சார்பில் சண்முகையா, புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சி சார்பில் வைகுண்டமாரி, ஐஜேகே சார்பில் அருணாதேவி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் திமுக1989 மற்றும் 2019 இடைத்தேர்தல் என 2 முறை வெற்றி பெற்றுள்ளது. 1991, 2001, 2006, 2016 என 4 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஜனதா கட்சியுடன் இணைந்து 1996-ல் ஒரு முறை, அதிமுகவுடன் இணைந்து ஒரு முறை என 2 முறை இந்த தொகுதியில் புதிய தமிழகம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுந்தரராஜ், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை விட 493 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இத்தொகுதியில், புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடுகிறார். 1996-ல் அவர் ஒட்டப்பிடாரத்தில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏவானார். 2001-ல் திமுக கூட்டணியிலும், 2006-ல் பகுஜன் சமாஜ் கூட்டணியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்த கிருஷ்ணசாமி, 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது ஒட்டப்பிடாரம் தொகுதியில் 6 ஆவது முறையாக களம் இறங்கியிருக்கிறார் கிருஷ்ணசாமி.
அதிமுக சார்பில் போட்டியிடும் மோகன், ஏற்கனவே ஒட்டப்பிடாரம் தொகுதியில் 2006 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2019 ம் ஆண்டு இடைத்தேர்தலில் தோல்வியடைந்த மோகனுக்கு மீண்டும் இந்த தேர்தலில் அதிமுக வாய்ப்பளித்துள்ளது. திமுக சார்பில் களமிறங்கியுள்ள சண்முகையா 2019 இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1989 ஆம் ஆண்டுக்குப்பிறகு திமுகவுக்கு இத்தொகுதியில் வெற்றி தேடி தந்த சண்முகையாவுக்கு மீண்டும் போட்டியிட அக்கட்சி வாய்ப்பளித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வைகுண்டமாரி , 2009 ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல்முறை. மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி கட்சியான ஐஜேகே சார்பில் அருணாதேவி போட்டியிடுகிறார். இளையவர், புதியவர் என்று கூறி இவர் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.