வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர்; வெளியே வராத நச்சுக்கொடி..நிற்காத ரத்தப்போக்கு- இளம்பெண் உயிரிழப்பு

போச்சம்பள்ளி அருகே இயற்கை முறையில் பிரசவம் பார்த்த பெண் உயிரிழந்துள்ளார். ஆண் குழந்தை சுகமுடன் பிறந்தநிலையில் தாய் உயிரிழந்த சோக நிகழ்வு நடந்துள்ளது.
மாதேஷ், லோகநாயகி
மாதேஷ், லோகநாயகிPT
Published on

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (30). இவருக்கும் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் என்பவரது மகள் லோகநாயகிக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள்.

சிறு வயதிலிருந்தே லோகநாயகி இயற்கை முறையில் விளையும் பொருட்களை மட்டுமே உண்டு வந்தார். தனது தோட்டத்தில் ரசாயன உரம், பூச்சி கொள்ளி சேர்த்தாமல் இயற்கை முறையில் விளைந்த நெல், காய்கறிகளை விளைந்து அவற்றை மட்டுமே உண்டு வந்தார். திருமணத்தின் போதும் கூட முன்ஏற்பாடாக இயற்கை முறையில் விளைவித்த நெல் மூலம் கிடைக்கப்பெற்ற அரிசியிலேயே உணவு சமைத்து வந்திருந்த திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு பரிமாறப்பட்டது. தலையில் வைக்கும் பூ கூட இயற்கை முறையில் விளைந்திந்தால் மட்டுமே தலையில் சூடுவார் லோகநாயகி.

திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கருத்தரித்த லோகநாயகிக்கு பிரசவ நேரம் வந்ததையடுத்து, அனுமந்தபுரம் கிராம செவிலியரிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதாக கூறிவிட்டு, அவரும் அவரது கணவரும் தாய் வீட்டிற்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு வந்துள்ளனர். இயற்கை முறையிலேயே பிரசவம் பார்க்கப்பட வேண்டுமென லோகநாயகி கேட்டுக்கொண்டதால், கணவன் மாதேஷ் மற்றும் லோகநாயகி ஆகிய இருவரும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிகளவில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, கணவர் பிரசவம் பார்த்துள்ளார், ஆண் குழந்தை சுகப்பிரசவம் அடைந்தது. பின்னர் நச்சுக்கொடி வெளியே வராமல் தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் நச்சுக்கொடி வெளியே வந்துவிடும் என காத்திருந்த நிலையில், லோகநாயகிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காலை 10 மணியளவில் போச்சம்பள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பரிசோதித்து பார்த்த மருத்துவர் லோகநாயகி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். புளியம்பட்டி கிராம செவிலியர் பாக்கியலட்சுமி புகாரின் பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டியிலேயே பிரசவம் பார்ப்பவர்களில் சிலர் இறந்து போகும் சம்பவங்கள் அவ்வவ்போது நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை பெற்று பிரசவம் பார்க்குமாறு அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அப்படியிருந்து சிலர் இதுபோன்று வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வை இன்னும் கூடுதலாக ஏற்படுத்த வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com