கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள 40க்கும் மேற்பட்ட பழங்குடியினர் தங்களுக்கென தேன் விற்பனை கூடம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட பழங்குடி கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கு பிரதானமான வாழ்வாதாரமாக மலைத்தேன் உள்ளது. கத்திரிப்பூ, நாவல்பூ, வேங்கைப்பூ, குறிஞ்சிப்பூ, யூக்கலிப்டஸ் பூ உள்ளிட்ட பல்வேறு வகையிலான பூக்கள் பூக்கும் காலத்திற்கு ஏற்ப எடுக்கப்படும் தேன், அந்த அந்த பூக்களின் சுவையோடு மாறுபட்ட தனித்தன்மை வாய்ந்தது என பழங்குடியினர் கூறுகின்றனர்.
இதில் நாவல் பூவின் தேன் தற்பொழுது அதிக அளவில் உருவாவதாகவும், அதன் மருத்துவ குணம், சக்கரை நோயை தீர்க்கும் மருந்தாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இவை தவிர வருடம் ஒருமுறை பூக்கும் சிறுகுறிஞ்சிப்பூ தேன், யூக்கலிப்டஸ் பூ தேன், வேங்கை பூ தேன் என பலதரப்பட்ட வகைகள் இருப்பதாகவும், அவை தனித்துவமான மருந்தாக திகழ்வதாகவும் கூறுகின்றனர். இதனை வனப்பகுதிகளுக்குள் சென்று மிகவும் கடினமான சூழலில், தேன் அடையில் புகைமூட்டம் போட்டு எடுக்கின்றனர். சந்தைப்படுத்துவதில் ஏற்கெனவே அதிக சிக்கல் இருப்பதாகவும், தற்பொழுது பொது முடக்கத்தில் இன்னும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தப்படுகின்றனர்.
இதுவரை பழங்குடியின மக்களுக்கு என தேன் விற்பனை கூடங்கள் இல்லை எனவும், எனவே தங்களுக்கு தோட்டக்கலை பண்ணையில் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யும் வகையில் கூடம் அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, பழங்குடியினர் எடுக்கும் தேனை சந்தைப்படுத்தவும், விற்பனை நிலையம் அமைக்கவும் கோரிக்கை அனுப்பப்பட்டு, முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.