கொடைக்கானல் நகரில் மூன்று துறைகள் நடத்தும் மும்முனை கிடுக்குப்பிடி சோதனை... முகக்கவசம், தலைக்கவசம், இ-பாஸ் சோதனைகளை கோட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில், வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கியுள்ளனர். நான்கு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் முறையாக முகக்கவசம் அணிந்துள்ளனரா அதேபோல இரண்டு சக்கர வாகனங்களில் வரும் பயணிகள் முகக்கவசம், மற்றும் தலைக்கவசம் அணிந்துள்ளனரா என்று மூன்று துறைகள் இணைந்து மும்முனை கிடுக்குப்பிடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏரிப்பாலத்தில் ஒருபுறம் காவல்துறையும் மறுபுறம் சுகாதாரத் துறையுடன் இணைந்து நடுவில் போக்குவரத்துத் துறை என மும்முனை கிடுக்குப்பிடி சோதனைகளை கோட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளதாக சோதனை செய்து வரும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
முகக்கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய், தலைக் கவசம் அணியாவிட்டால் 100 ரூபாய், ஒரு வாகனத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறி கூடுதலான நபர்களுடன் பயணித்தால் 500 ரூபாய், என பல்வேறு வகைகளில் சுற்றுலா பயணிகளிடம் அபராதம் விதித்து வருகின்றனர்.
இதில் உள்ளூரில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய மக்களுக்கும் அபராதம் விதிக்கப்படுவதால் அபராதத்தை கட்டிவிட்டு சோகத்துடன் வீடு திரும்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது.