8 மாதங்களுக்குப் பிறகு கொடைக்கானல் ஏரிச்சாலையில் சுற்றுலா பயணிகள் சைக்கிள் சவாரி செய்ய இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு நாடெங்கிலும் அமல்படுத்தப்பட்டு ஆறு மாதங்களுக்கு பின்னர், கொடைக்கானல் மலைப்பகுதிக்கு இ-பாஸ் எடுத்துக்கொண்டு சுற்றுலாவர பயணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பூங்காக்களை மட்டும் பார்வையிட முதல் கட்டமாக அனுமதியளித்த மாவட்ட நிர்வாகம், பின்னர் கோக்கர்ஸ் சுற்றுலா தலத்தையும் பயணிகளுக்காக திறந்தது.
அதனையடுத்து இன்று முதல் சைக்களில் கிருமி நாசினி தெளித்து, முறையான விதிமுறைகளை பின்பற்றி, ஏரிச்சாலையில் சுற்றுலா பயணிகள் சைக்கிள் சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இன்று கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்ட வாடகை சைக்கிள் கடைகளில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் சைக்கிளை எடுத்து ஏரிச்சாலையில் ஜாலியாக ஓட்டிவரத் துவங்கியுள்ளனர்.