தொடர் விடுமுறை காலங்களில் கொடைக்கானலில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்க பல்வேறு திட்டங்களை உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் ஆலோசித்தார்.
தமிழகத்தில் தொடர் விடுமுறை காலங்கள் மற்றும் கோடை காலத்தில், பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுப்பது வழக்கம். அந்த காலக் கட்டத்தில், பெருமாள் மலையில் இருந்து நகருக்குள் வருவதற்கு பல மணி நேரங்கள் செலவாகி, வரும் பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சூழல் உருவாகும். மேலும் 12 மைல் சுற்றுலா தலங்களையும் காண கடும் போக்குவரத்து நெரிசல் உருவாகி சுற்றுலா வரும் பயணிகள் ஒரு இடத்தையும் முழுமையாக பார்க்க முடியாமல் ஊர் திரும்பும் நிலை ஏற்படும். இதுதவிர நகர் மற்றும் புறநகர் சுற்றுலா தலங்களில் வாகன நிறுத்தம் சரிவர இல்லாததால் பயணிகள் அவதிப்படும் நிலையும் உள்ளது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில், உள்ளூர் மக்களும் இணைந்து பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டனர். ஆலோசனையில் பேருந்து நிலையத்திற்குள் வாகன நிறுத்தம் ஏற்படுத்துதல், தனியார் நிலங்களில் வாகன நிறுத்தம் அமைக்க உரிமம் கொடுத்தல், வாரம் ஒருமுறை மட்டும் இயங்கும் வாரச்சந்தை பகுதியை வாகன நிறுத்தமாக மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. பெருமாள் மலையில் இருந்து நகருக்கு வர, பேத்துப்பாறை, அஞ்சு வீடு, கோவில்பட்டி வழிகளில் மாற்றுச்சாலை அமைத்தல் உள்ளிட்ட ஆலோசனைகளும், குணா குகை, தூண் பாறை, மோயர் சதுக்கம் ஆகிய சுற்றுலா தலங்களை 24 மணி நேரமும் திறக்கக்கோரியும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும் நகரில் உள்ள சில முக்கிய சாலைகளில் இடது வலது புறத்தை தடுக்கும், நிரந்தர கட்டட அமைப்புகள் ஏற்படுத்தியும், சில சாலைகளை ஜீரோ பார்க்கிங் பகுதியாக மாற்றியும், பல்வேறு சாலைகளை ஒரு வழிப்பாதையாக மாற்றவும் ஆலோசிக்கப்பட்டது. வாகன நிறுத்த வசதிகள் இல்லாமல் இயங்கும் விடுதிகளின் உரிமத்தை ரத்து செய்யவும் பரிசீலிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற முதல் கட்ட ஆலோசனையை தொடர்ந்து, விரைவில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றும், பின்னர் புதிய நடைமுறைகள் விரைவில் அமலுக்கு வரும் என்றும் உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.