மூன்று நாட்கள் தொடர் விடுமுறையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்கள் தொடர் விடுமுறையால், கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பல நூற்றுக்கணக்கான வாகனங்களில் வரத் துவங்கியுள்ளனர். கொடைக்கானலுக்கு வரும் பயணிகள் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வருகிறார்களா என சோதனை செய்ய, வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதியில் நகராட்சி சோதனை சாவடி அமைத்துள்ளது.
இங்கு பணியாளர்கள் பற்றாக்குறையால் குவியும் நூற்றுக்கணக்கான வாகனங்களை, விரைவாக சோதனை செய்து நகருக்குள் அனுப்ப முடியாமல் நகராட்சி பணியாளர்கள் திணறி வருகின்றனர். இதனால் மலைப்பகுதிக்கு வரும் பயணிகள் தங்கள் வாகனங்களை, இ-பாஸ் சோதனைக்கு நீண்டநேரம் நிறுத்தி காத்திருக்கும் நிலை ஏற்படுவதால், புலிச்சோலைக்குள் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த போலீசார் முயற்சித்து வருகின்றனர். கூடுதலாக நகராட்சி பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை பணியாளர்களை சோதனை சாவடியில் பணியமர்த்தி, இ-பாஸ் சோதனையை எளிதாக்கி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.