திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான சொத்துகுவிப்பு வழக்கை திருச்சி கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006-லிருந்து 2011 ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமலாக்கத்துறை திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கே.என்.நேருவின் பெயரை வைத்து மற்றவர்கள் தான் வருமானம் ஈட்டியுள்ளார்கள் என கூறி இந்த வழக்கிலிந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
கே.என்.நேரு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. அங்கும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்டதில் கே.என்.நேருவுக்கு தொடர்பிருப்பதாகவும், அவரையும் வழக்கில் சேர்த்து கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மீண்டும் கே.என்.நேருவை இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரிப்பார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.