கர்நாடக சட்டப்பேரவைக்கு தாற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ கே.ஜி.போபையாவை ஆளுநர் நியமித்துள்ளார்.
கர்நாடகாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தாற்காலிக சபாநாயகராக இருவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உமேஷ் கர்தி ஆகியோரின் பெயர்களை, கர்நாடக சட்டமன்ற செயலாளர் மூர்த்தி பரிந்துரை செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்த இருவரில் ஒருவரை தாற்காலிக சபாநாயகராக கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா நியமிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், 2009 முதல் 2013 வரை கர்நாடக சட்டசபையின் சபாநாயகராக இருந்த எம்.எல்.ஏ கே.ஜி.போபையாவை தற்போது, தாற்காலிக சபாநாயகராக ஆளுநர் வஜுபாய் வாலா நியமனம் செய்துள்ளார். மூன்று முறை பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் போபையா. தற்போது, விரஜ்பெட் தொகுதியில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆளுநர் உத்தரவை அடுத்து கே.ஜி.போபையா உடனடியாக தாற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றார்.