மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சபரிமலை விவகாரத்தை பேசக்கூடாது என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17வது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது. ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல், கேரள மாநிலத்தில் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே23ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், உணர்வுபூர்வமான சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத்தில் போது பேசக் கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்களுக்கு கேரள தலைமை தேர்தல் அதிகாரி டி.ஆர்.மீனா எச்சரிக்கை விடுத்துள்ளார். சபரிமலை விவகாரத்தை பேசி மத உணர்வுகளை தூண்டிவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார். தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்த நிலையில், தேர்தல் அதிகாரி இன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்வது எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், சபரிமலை பகுதியில் டிசம்பர் மாதம் முழுவதும் பதட்டமான சூழல் காணப்பட்டது.