ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரனும், திமுக சார்பில் மருது கணேஷும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் போட்டியிடுகிறார். விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துவிட்டன. இதனிடையே, பிரபலமான வேட்பாளர் ஒருவரை ஆர்.கே.நகர் தேர்தலில் நிறுத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பாஜக மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வரும் கரு.நகராஜன் ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கமலாயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேட்பாளர் கரு.நாகராஜனை தமிழிசை அறிமுகம் செய்து வைத்தார். கடந்த முறை நிறுத்தப்பட்ட இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு உடல்நலக்குறைவு என்பதால், புதிய வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பித்த போது, கட்சியின் பொதுச் செயலாளராக கரு.நாகராஜன் பணியாற்றினார். பின் 2016ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து பிரிந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.