கர்நாடக சட்டசபைக் கூட்டம் சபாநாயகர் ரமேஷ் குமார் தலைமையில் இரண்டாவது நாளாக இன்று தொடங்கியது.
கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? கவிழுமா என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று காலை 11 மணியளவில் சட்டப்பேரவை கூடியது. அப்போது தன் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் குமாரசாமி பேசினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என பாஜகவினர் ஆளுநரை சந்தித்து முறையிட்டனர். அதே நேரத்தில் ஆளுநரின் வேண்டுகோளுக்கு எதிராக பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவை இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முதல்வர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், கர்நாடக சட்டசபைக் கூட்டம் சபாநாயகர் ரமேஷ் குமார் தலைமையில் இரண்டாவது நாளாக இன்று தொடங்கியது. அவை தொடங்கியதும், ‘என் மீது களங்கம் சுமத்தினாலும் பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் உள்ளது’ என சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்தார். பின்னர், முதல்வர் குமாரசாமி பேசினார்.
இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் அனுமதிக்கப்பட்டுள்ள மும்பை மருத்துவமனைக்கு கர்நாடக போலீஸ் சென்றது. மேலும், கர்நாடக அரசியல் சூழல் தொடர்பாக விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது.