தமிழகத்தை பின்பற்றி அரசுக்கு எதிரான அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்க வேண்டும் என கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா பேசியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது நான்காவது நாளாக
இன்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின் போது பேசிய சித்தராமையா தமிழகத்தின் அரசியல் நிலைமையை
சுட்டிக் காட்டி பேசினார்.
சித்தராமையா பேசுகையில், “தமிழகத்தில் 18 எம்.எல்,ஏ.க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தந்த ஆதரவை விலக்கிக்
கொண்டனர். தமிழக முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 பேரையும் தமிழக சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
18 பேரை தமிழக சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தபோது கொறடா உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. தமிழக சபாநாயகரின்
தகுதிநீக்க உத்தரவை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.
ஒருவர் ராஜினாமா செய்யும் போது முழு மனதுடன் திறந்த புத்தகமாக ராஜினாமா கடிதம் தர வேண்டும். ராஜினாமாவுக்கு முன்
குதிரை பேரம் நடந்தது உறுதி எனில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு. தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி
ஜனநாயகத்தை சபாநாயகர் காப்பாற்ற வேண்டும். பணம் மற்றும் அமைச்சர் பதவி ஆசை காட்டி எம்.எல்.ஏக்களை பாஜகவினர்
விலைக்கு வாங்குவதை தடுக்க வேண்டும்.
கர்நாடகாவில் பாஜக தற்போது செய்து வரும் செயல் குணப்படுத்த முடியாத ஒரு வியாதி. இந்த வியாதியை
கண்டுகொள்ளாவிட்டால் எந்த மாநிலத்திலும் எந்த அரசும் ஆட்சி செய்ய முடியாது. ஆட்சி மாற்றம் கொண்டுவர மொத்த
வியாபாரம் செய்தால் போதும் என்பதை கர்நாடக மக்கள் ஏற்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.