கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் படகு நிறுத்துவதற்கு வாடகையாக ரூ. 12 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள், பங்கு தந்தையர் ஆகியோர் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு நிறுத்துவதற்கு (பாலம் வாடகை) வாடகையாக ரூபாய் 12 ஆயிரம் ஒவ்வொருவரிடமும் வசூலிக்கப்படுகிறது. இது மீனவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மற்ற மாநிலங்களில் ஆண்டு வாடகை வசூலிப்பது இல்லை. அதற்கு பதிலாக ஒவ்வொரு முறையும் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனைக்கு வரும்போது கட்டணம் நூறு ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
அதுபோன்று தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ஒவ்வொரு முறையும் விசைப்படகு மீன் இறக்குவதற்கு வருகின்றபோது மட்டும் ரூ.100 மட்டும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டுமே தவிர, ஆண்டுக் கட்டணம் ரூ.12 ஆயிரமாக வசூலிக்கக் கூடாது.
ஆழ்கடல் மீன்பிடிப்பு அனுமதி சீட்டு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அலையில் சிக்கி மாயமான முள்ளூர்துறையை சேர்ந்த அந்தோணி, மார்த்தாண்டம்துறையை சேர்ந்த சேர்ந்த ஷிபு ஆகிய மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.