2ஜி ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து கட்சியை பலப்படுத்தி, தமிழக மக்களுக்காக பாடுபடப் போவதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து இன்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி, இந்த நாளுக்காகத் தான் கடந்த 6 ஆண்டுகளாக காத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் டிவியின் இயக்குநராக பதவியேற்ற 20 நாளில் தன் மீது வேண்டுமென்றே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ள கனிமொழி, அதன் மூலம் தேர்தலிலும் திமுகவை தோல்வி அடைய வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். பணம் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வர நினைத்திருந்தால், 20 வயதிலேயே தம்மால் அரசியலுக்கு வந்திருக்க முடியும் என்றும், 40 வயதில் கட்சியை பலப்படுத்த வந்திருக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
பதவி ஆசை இருந்திருந்தால் எளிதாக அமைச்சராக ஆகி இருக்க முடியும் என்றும் ஆனால் அதை செய்யாமல் தேடிவந்த அமைச்சர் பதவியை நிராகரித்ததாக கனிமொழி தெரிவித்துள்ளார். 6 ஆண்டுகளாக நீடித்த நெருக்கடியின்போது தமக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினர், கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இனி கட்சியை பலப்படுத்தி, தமிழக மக்களுக்காக பாடுபடப்போவதாகவும் கனிமொழி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.