அரசாங்கத்திற்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கஜா புயலானது தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை புரட்டிப் போட்டது. அரசு ஒரு புறம் தீவிரமாக செயல்பட்டு நிவாரண உதவிகளை செய்து வருகிறது. பிற அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை நேரில் வழங்கி வருகின்றனர் சிலர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.
புயல் பாதித்த பகுதிகளில் குடிசை வாழ் மக்களுக்கு ஒரு லட்சம் காங்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பல்வேறு வகையான நிவாரணப் பொருட்கள் வெளியூர்களில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனிடையே ஏர் இந்தியா விமானத்தில் நிவாரணப் பொருட்களை கொண்டு வர சரக்கு கட்டணம் இல்லை என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் அவசர உதவிக்காக ரூ.10 கோடி வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன்
தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அரசாங்கத்திற்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் உடனே அனைத்தையும் சரிசெய்ய கோரவில்லை எனவும் மக்கள் பிரச்னைகளை கேட்டு அவற்றை தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஒரு இரங்கல்கூட தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும் என கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.