யாகாவாராயினும் நாகாப்போம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாலர் வானதி சீனிவாசனும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் களத்தில் உள்ளனர். ஆனால பாஜகவின் வானதிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் கமலுக்கும் கடும் போட்டி நிலவுவதாக அந்த தொகுதி காட்சியளிக்கிறது. இதனால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது.
இதற்கான தேர்தல் பிரசாரத்தில் கட்சியின் தலைவர்கள் பேச்சாளர்கள் எதிரணியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதனடிப்படையில் பாஜகவின் பேச்சாளரும் நடிகருமான ராதாரவி அண்மையில் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து ஒருமையில் பேசியிருந்தார். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பரப்புரையில் பேசிய வானதி சீனிவாசன் “என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்கிறார் கமல். அவரைப் பார்த்து கேட்கிறேன். இதுவரை நீங்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்துவருகிறீர்கள். லிப் சர்வீஸ் என்றால் இரண்டு அர்த்தங்கள் வரும். ஒன்று உதட்டு அளவில் சேவை செய்வது. இன்னொன்று உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. இதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்லலாமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், யாகாவாராயினும் நாகாப்போம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன. எதிர் தரப்பை எதிரி தரப்பென கருதுவது முதிர்ச்சியின்மை. யாகாவாராயினும் நாகாப்போம் சொல் இழுக்கற்று. தலைமுறை நம்மைக் கவனிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.