நடிகர் கமல்ஹாசன், தனது 4 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கமல்ஹாசன் ட்விட்டர் அரசியலில் இருந்து, நேரடி அரசியல் களத்தில் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி இறங்குகிறார். இதற்காக ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தைத் தொடங்கும் அவர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகிகள் நியமனம், கட்சிப் பெயர், கொடி, கொள்கைகள் உள்ளிட்ட பணிகளில் கமல்ஹாசன் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனைக்குப் பிறகு வடசென்னை மற்றும் தென்சென்னை ரசிகர்களை அவர் சந்திக்கவுள்ளார். இதில் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, நாகை, தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.