நடிகர் கமல்ஹாசனுக்கு மனநிலை சரியில்லை, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வினய் காட்டியர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வார இதழ் ஒன்றில் என்னுள் மையம் கொண்ட புயல் என்ற தலைப்பில் அரசியல் தொடர் ஒன்றினை கமல் எழுதி வருகிறார். இந்த வாரம் வெளியாகியுள்ள இதழில், வலதுசாரிகள் இனி இந்து தீவிரவாதம் இல்லை என்று கூற முடியாது என்று கமல் தெரிவித்து இருந்தார்.
கமலின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி.யும் மூத்த தலைவருமான வினய் காட்டியர், கமல்ஹாசன் தன்னுடைய கருத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “கமலின் மனநிலை ஒரு நிலையில் இல்லை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியலில் இதுபோன்று அவதூறு பரப்புவது சரியானது அல்ல. அவரது கருத்துக்கு என்ன ஆதாரம் வைத்துள்ளார்?” என்று கூறினார்.
அதேபோல், கமலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பாஜக செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ், இஸ்லாமியர்களின் வாக்குகளை குறிவைத்து கமல் பேசுவதாக விமர்சித்தார்.