தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நேற்று வரை 11 பேர் உயிரிழந்தனர். இன்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது போலீசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால், தூத்துக்குடியில் பதட்டம் நீடித்து வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறை தகவல் தெரிவித்துள்ளது. கலவரம் தொடர்பாக, வதந்திகள் பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இணையசேவை முடக்கம் எத்தனை நாட்களுக்கு என்பதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. பதட்டமான சூழல் மாறும் வரை இந்தச் சேவை முடக்கம் தொடரும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே தூத்துக்குடியில் வரும் 25ம் தேதி காலை வரை 144 தடை உத்தரவை நீடித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று நிகழ்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு இன்று பிற்பகல் 1 மணி முதல் 25ம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவு பிறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட. தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த பகுதிகள் மற்றும் வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம், எப்போதும் வென்றான் ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுஇடங்களில் கூட்டம் நடத்துவதற்கும் 144 உத்தரவின் கீழ் தடைவிதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சைக்கிள், இருசக்கரவாகனம், நான்குசக்கர வாகனம் மூலம் பேரணியாக வாள், கத்தி, கம்பு, கற்கள், அரசியல் மற்றும் ஜாதிக் கொடிக் கம்புகள் ஆகியவற்கை கொண்டு வர தடைவிதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள பொதுமக்களை அழைத்துவருவதற்கும் தடைவிதிக்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது பதிவில், “தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா? அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கி வைப்பீர்களா? சரித்திரம் காணாதப் புரட்சி வெடிக்கும். மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை.அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை!” என்றுள்ளார்.